No Entry for Singles - A banner hanging in the park Photograph: (park)
ஓசூரில் பூங்கா ஒன்றில் திருமணம் ஆகாதவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என வைக்கப்பட்ட பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ராமநாயக்கன் ஏரி என்ற ஏரி உள்ளது. சுமார் 152 ஏக்கர் கொண்ட இந்த ஏரியின் ஒரு கரையில் மாநகராட்சி சார்பில் குழந்தைகள் பூங்கா சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. இந்நிலையில் அந்த பூங்காவிற்கு வெளியே நுழைவு வாயில் பகுதியில் திருமணமாகாதவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்ற ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அந்த பேனரில் தமிழக அரசின் முத்திரை மற்றும் காவல்துறையின் முத்திரையும் இடம் பெற்றிருந்தது. இந்த பேனர் விவகாரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்த, சிறிது நேரத்தில் உடனடியாக அந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த பேனரை பூங்கா நிர்வாகம் வைத்ததா அல்லது காவல்துறையினர் சார்பில் வைக்கப்பட்டதா என்று கேள்வி எழுந்த நிலையில் தங்கள் தரப்பில் வைக்கப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் இந்த பேனரை வைத்தது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.