பீகாரைத் தொடர்ந்து வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் (S.I.R - Special Intensive Revision) தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 14ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் எனவும், வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19 வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய தேர்தல் ஆணையம், தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் கால அட்டவணையை மாற்றி வெளியிட்டுள்ளது.
அதன்படி, கணக்கீட்டு காலத்தை 14.12.2025 வரை நீட்டித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12 2025 அன்று வெளியிடப்படும். இந்த நடவடிக்கையில், எந்த தகுதியான வாக்காளரும் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டினைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் (BLAs) வாக்குச்சாவடி அளவில் கூட்டங்களை நடத்துவர். இந்தக் கூட்டங்களில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் இணைந்து மூன்று முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்றும் தொடர்பு கொள்ள முடியாத முகவரி இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள் (Shifted), இறந்தவர்/ இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் (Dead/Duplicate) என குறிக்கப்பட்ட (ASD) வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழங்கப்படும்.
மாநிலத்தின் 68 ஆயிரத்து 467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குச்சாவடி வாரியாக கூட்டங்களை நடத்தி முகவரி இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் என குறிக்கப்பட்ட பட்டியலை வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் உண்மையான நிலையைத் தெளிவுபடுத்தி, ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பே திருத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டபின், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 1200 வாக்காளர்கள் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டதால், தமிழகத்தில் மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது இதற்கான தேவையான மாற்றங்கள் வாக்காளர் பட்டியல் தரவுதளத்தில் (Database) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/archana-patnaik-ias-2025-12-12-08-39-46.jpg)
மேலும், புதிய வாக்காளர்கள் படிவம் 6 மற்றும் அதனுடன் உறுதி மொழி படிவத்தையும் நிரப்பி வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிப்பதற்கு அல்லது செயலி (ECINet) / இணையதளம் (https://voters.eci.gov.in/) மூலம் ஆன்லைனில் சமர்ப்பித்து இறுதி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமர்ப்பிக்கும் காலம் 19.12.2025 முதல் 18.1.2026 வரை நடைபெறும்; இறுதி வாக்காளர் பட்டியல் 17.2.2026 அன்று வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us