கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நகராட்சி தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்த வெண்ணிலா, நகராட்சி வாசலில் தரையில் அமர்ந்து, கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிற்கு நகராட்சி வாகனத்தில் சென்றதால் அவரது வாகன ஓட்டுனரை பணிநீக்கம் செய்து, அவரது காரையும் பறித்த சம்பவத்தைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, நகராட்சியில் உள்ள ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இது குறித்து, நாம் அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது...  திட்டக்குடி பேரூராட்சியாக இருந்து வந்தது, கடந்த 2021-ம் ஆண்டு 24 வார்டுகளைக் கொண்ட நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 18 பேரும், சுயேட்சையாக ஒருவரும், அதிமுக சார்பில் ஐந்து பேரும் வெற்றிபெற்று, நகர்மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இதன் நகராட்சித் தலைவராக வெண்ணிலா தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் மீது திமுக கவுன்சிலர்கள் 12 பேர், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர், அதிமுக கவுன்சிலர்கள் ஐந்து பேர் என மொத்தம் 18 பேர், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நகராட்சி பொறியாளரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து, நம்பிக்கை இல்லா தீர்மானம் மனு அளித்த கவுன்சிலர்கள், நகராட்சித் தலைவியாக உள்ள வெண்ணிலா உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதில்லை; நகராட்சி ஊழியர்களைத் தரக்குறைவாகப் பேசி வருகிறார். இதன் காரணமாக அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்ததாகக் கூறுகின்றனர்.

நகராட்சித் தலைவி வெண்ணிலா இது குறித்து கூறுகையில், "முப்பெரும் விழாவிற்கு சென்றதாக நான் பயன்படுத்திய காரைப் பறிமுதல் செய்து, எனது ஓட்டுநரைப் பணிநீக்கம் செய்துள்ளனர். இந்த அலுவலகத்தில் என்னைத் தலைவராக யாரும் மதிப்பதில்லை. கையெழுத்து கேட்டால் மட்டும் அதைப் போட்டுவிட வேண்டும். நான் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது. நான் பட்டியல் சமூகப் பெண் என்பதால், உடல் மொழியிலும் வார்த்தையாலும், ஒருமையில் துணைத் தலைவர் உள்ளிட்ட அவருடன் உள்ள கவுன்சிலர்கள் பேசுவார்கள். கமிஷனர் முரளிதரன் இதே அரசுக் காரை எத்தனையோ முறை தனது சொந்த ஊரான செஞ்சிக்கும், கடலூருக்கும் எடுத்துச் சென்றுள்ளார். அப்போதெல்லாம் விதியை மீறியதாக ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்தார்களா? காரைப் பறிமுதல் செய்தார்களா?

Advertisment

இன்ஜினியரும் பலமுறை காரைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்தார்களா? சஸ்பெண்ட் செய்தார்களா? நகராட்சியில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வேலை நடந்துள்ளது. இதில் நகராட்சித் துணைத் தலைவரும், நகராட்சி அதிகாரிகளும் அனைத்து ஆதாயங்களும் பெற்றுள்ளனர். இதுகுறித்து கேட்டால் வாக்குவாதம் ஏற்படுகிறது. என்னை அடக்கிய வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். 'எங்க முன்னாடியே கெத்தா கார்ல போறியா? என்னைக்கா இருந்தாலும் இதற்குப் பதில் சொல்லுவ' எனக் கூறிக்கொண்டே இருந்தார்கள். தற்போது இந்தக் காரணத்தை வைத்து என்னை அசிங்கப்படுத்தி, காரைப் பிடுங்கிக்கொண்டார்கள். இதற்கு நகராட்சித் துணைத் தலைவரும், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள்தான் காரணம். இதற்கு என்ன விசாரணை வைத்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்" என்றார்.