'No chance as long as EPS exists' - Interview with T.T.V. Dinakaran Photograph: (ammk)
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியதைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
வெளியேறிய இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை பாஜகவினர் மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக நேற்று பாஜக முன்னாள் தலைவர், டி.டி.வி.தினகரனுடன் சந்திப்பு மேற்கொண்டார். அதில் மீண்டும் கூட்டணிக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் மீண்டும் டி.டி.வி.தினகரன் வருவதற்கு வாய்ப்பு இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், ''முன்னாள் பாஜக தலைவரால் தான் பாஜக கூட்டணியில் இடம்பெற்றோம். நான் மதிக்கின்ற சில பெரியவர்கள், அனுபவம் மிக்கவர்கள் ஜெயலலிதாவின் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றனர். அதற்கு வாய்ப்பே இல்லை. இருந்தாலும் முயற்சி செய்யுங்கள் என்றேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அக்கூட்டணிக்கு வருவது குறித்து மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை. எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருந்தால் கூட்டணியில் தொடர வாய்ப்பில்லை என எழுத்துபூர்வமாகவே அவர்களிடம் கொடுத்திருக்கிறேன்'' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.