NLC poured funds into the university Photograph: (NLC)
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு என்எல்சி இந்தியா நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் 4 பேருக்கு ரூ 3.55 கோடி நிதி வழங்கியுள்ளது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநரகம் ஆனது நிலக்கரி பயன்பாடு, பன்முகப்படுத்துதல்,தயாரிப்பு மேம்பாடு, துணைத் தயாரிப்புகளின் பயன்பாடு, திடக்கழிவு மேலாண்மை, பாழ்பட்ட நில மீட்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் சேமிப்பு, கரைப்பு மதிப்பீடு மற்றும் தடுப்பு. பயன்பாடுகள், நேரடி கண்காணிப்பு முறைகள் போன்ற பல துறைகளில் ஆராய்ச்சி செய்து வருகிறது.
இத்திட்டங்களை செயல்படுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளுடன் இணைந்து பணியாற்றுகிறது. இந்நிலையில் என்எல்சி நிறுவனம் சுரங்க செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்டுகளுக்கான தானியக்க கண்காணிப்பு மற்றும் குறைபாடு கண்டறிதல் முறைகள் குறித்த ஆய்வுக்கு சுரங்கப் பொறியியல் பிரிவு இயக்குநர் சி.ஜி.சரவணனுக்கு ரூ 96.88 லட்சம் நிதியும், உற்பத்தியல் துறை மற்றும் உலோகங்கள் இணைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் வி.பாலசுப்ரமணியனுக்கு எரிக்கப்பட்ட நிலக்கரியின் சாம்பலில் இருந்து பிளாஸ்மா தெளிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மெட்டல்கள் தயாரித்தல் குறித்தான ஆய்விற்கு ரூ 99.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இயந்திரவியல் துறை இணைப் பேராசிரியர் பி. பிரேம் குமாருக்கு பயோகேஸிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜனை உருவாக்கும் ஆய்விற்காக ரூ 95.84 லட்சம் நிதி வழங்கியுள்ளது. மேலும் கடல்சார் உயிரியல் புலத்தில் உள்ள மேம்பட்ட ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் எ.கோபாலகிருஷ்ணனுக்கு லிக்னைட்டில் இருந்து பெறப்படும் அமிலத்தின் மூலம் மீன்வளப் பண்ணைகளில் ஏற்படும் நுண்ணுயிர் நோய்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி நிதியாக ரூ 63.44 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக துணைவேந்தர் நியமிக்கவில்லை, பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பணி நிரவல்களுக்கு தமிழக அரசின் பல்வேறு துறைக்கு மாற்றுவது, பணிநிரவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் சூழ்நிலையில் இந்த ஆராய்ச்சி நிதிகளை என்எல்சி இந்தியா நிறுவனம் வழங்கியது தொழில் சார்ந்த செயல்முறை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப் பல்கலைக்கழகத்தின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் எனப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகிறார்கள்.
Follow Us