பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மக்கள் செல்வாக்கும் மற்றும் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் திறமையால், இவர் மிக நீண்டகாலமாக அம்மாநில முதல்வராக நீடித்து வருகிறார். ‘ஐக்கிய ஜனதா தளம்’ கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இருப்பினும், அவரது மகன் நிஷாந்த் இதுவரை அரசியலில் ஈடுபடவில்லை. இது ஒரு ஆர்ச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்பட்டது.

Advertisment

காரணம், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தங்களது வாரிசுகளை அடுத்த கட்ட தலைவர்களாக நியமித்துவிடுவார்கள் அல்லது அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வார்கள். ஆனால், மிக நீண்டகாலமாக அரசியலில் இருந்தும், பல முறை முதல்வராகப் பதவி வகித்து வரும் நிலையிலும், அவர் தனது மகனை அரசியலுக்கு அழைத்து வரவில்லை.  

Advertisment

இந்த சூழலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவரும், பீகார் போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஷ்ரவன் குமார் முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் தீவிர அரசியலில் நுழைவது உறுதி. இன்னும் ஓரிரு நாட்களில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால், கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆனால், நிஷாந்த்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கப் பெறுமா? என்பது பற்றி எனக்குத் தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.  

நிஷாந்திற்கு 50 வயதாகிறது. இதுவரையில் அவர் அரசியலில் ஈடுபாடு காட்டியதில்லை. இப்போது, நிதிஷ் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இந்த சூழலில், நிஷாந்த்தின் வருகை பீகார் அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நிஷாந்த்தின் வருகையை பாஜக வரவேற்றுள்ளது.

Advertisment