இஸ்லாமிய பெண் அணிந்திருந்த ஹிஜாப்பை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வலுகட்டாயமாக கழற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதன்படி, பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் ‘ஆயுஷ்’ (ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) என்ற படிப்பு பயின்ற மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று (15-12-25) நடைபெற்றது. இந்த விழாவில், முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்று மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்த விழாவின் போது ஹிஜாப் அணிந்து கொண்டு ஒரு இஸ்லாமியப் பெண் மருத்துவர் சான்றிதழ் பெற மேடைக்கு வந்துள்ளார். அப்போது முதல்வர் நிதிஷ் குமார், அந்த பெண்ணின் ஹிஜாப்பை கீழே இழுத்து முகத்தை காண்பிக்கும்படி செய்தார். அப்போது மேடையில் இருந்த சுகாதார துறை அமைச்சர் மங்கள் பாண்டே, முதல்வரின் முதன்மைச் செயலாளர் தீபக் குமார் ஆகியோர் சிரித்தப்படி நின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராக பதவியேற்ற 1 மாதத்திற்குப் பிறகு, நிதிஷ் குமாரின் இச்செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ், அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கூறுகையில், “நிதிஷ் குமாருடைய வெட்கமற்ற தன்மையைப் பாருங்கள். ஒரு பெண் மருத்துவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற வரும் போது நிதிஷ் குமார் ஹிஜாப்பைக் கழற்றினார். பீகாரில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு நபர் வெளிப்படையாக இதுபோன்ற ஒரு மோசமான செயலில் ஈடுபடுகிறார். மாநிலத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள்? என்று யோசித்துப் பாருங்கள். இந்த அருவருப்பான நடத்தைக்காக நிதிஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த அருவருப்பானது மன்னிக்க முடியாதது” என்று தெரிவித்தது.
அதே போல் மாநிலத்தில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “நிதிஷ் குமாருக்கு என்ன ஆச்சு? அவரது மனநிலை இப்போது மிகவும் பரிதாபகரமான நிலையை அடைந்துவிட்டதா, அல்லது நிதிஷ் இப்போது 100% சங்கியாக மாறிவிட்டாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/16/nitishhijab-2025-12-16-10-11-08.jpg)