Nitish Kumar to take oath as Bihar's Chief Minister for the 10th time
பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதாவது 101 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 89 இடங்களையும், 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஜே.டி.யூ. 85 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்) 19 இடங்களிலும், மதச்சார்பற்ற ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி 5 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதே சமயம் இந்த தேர்தலில், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 141 தொகுதிகளில் போட்டியிட்டு 25 தொகுதிகளை மட்டுமே கைபற்றியுள்ளது. அந்த கூட்டணி சார்பில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்துள்ளது. தனித்து போட்டியிட்ட ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களைத் தாண்டி 202 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுள்ள நிலையில், பீகாரின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற நவம்பர் 20ஆம் தேதியன்று பீகாரின் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்க உள்ளதாகவும், அவரது அமைச்சரவையில் அதிக இடங்களை பா.ஜ.க பெறும் என்றும் கூறப்படுகிறது. பாட்னாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், 1990களில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தது. 2014இல் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்த நிதிஷ் குமார், 2015இல் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து அம்மாநில சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வராக பணியாற்றினார். அதன் பின்னர், அந்த கூட்டணியில் இருந்து விலகி 2017இல் மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
இதனையடுத்து, பா.ஜ.கவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார் 2022இல் மீண்டும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். இதற்கிடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக, நிதிஷ் குமார் எடுத்த முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது. இதனிடையே நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் இருந்தும் பீகாரில் இருக்கும் மகா கூட்டணியிலிருந்தும் விலகி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us