பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் கடந்த 6 ஆம் தேதியும் (06.11.2025), 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதியும் (11.11.2025) நடைபெற்றன. இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இத்தகைய சூழலில் தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 14 ஆம் தேதி (14.11.2025) எண்ணப்பட்டன.
இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனையொட்டி பாட்னாவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (19.11.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பா.ஜ.க மேலிட பொறுப்பாளர்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், கூட்டணிக் கட்சித் தலைவர்களான லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், பீகார் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நிதிஷ்குமார், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பீகார் முதல்வராக இன்று (20.11.2025) மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் நிதிஷ்குமாருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளில் 10வது முறையாக நிதிஷ்குமார் பீகார் முதல்வராகப் பதவியேற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/20/nithish-kumar-mic-2025-11-20-07-29-07.jpg)