“நீ ஒரு குழந்தை, உனக்கு எதுவும் தெரியாது” - சட்டசபையில் தேஜஸ்வி யாதவை விமர்சித்த நிதிஷ் குமார்!

nitishtejash

Nitish Kumar said You are a child, you know nothing to Tejashwi Yadav in the Assembly

பீகார் மாநிலத்தில், இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால், 20% புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்குகள், கடந்த 10ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா மற்றும் ஜோமால்யா பாக்சி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது மட்டுமல்லாமல், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் ஆதார், தேர்தல் புகைப்பட அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவை சேர்க்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, பட்டியலில் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகிறார்கள். அதில், பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பீகார் சட்டமன்றத்தில் இன்று (23-07-25) மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பீகார் சட்டமன்றத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பேசிய தேஜஸ்வி யாதவ், “கடந்த 2003இல் இதே போல் மேற்கொள்ளப்பட்டது. அதை முடிக்க ஒன்றரை வருடம் ஆனது. மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்த நடவடிக்கையை செயல்படுத்தியிருக்கலாம். பீகாரில் இப்போது மழைக்காலம். மக்கள் எப்படி படிவங்களை நிரப்புவார்கள்?. வாக்களிக்கும் சம உரிமையை அனைவருக்கும் அரசியலைமைப்பு சட்டம் கொடுத்திருக்கிறது. சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் வாக்காளர்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை சமர்பிக்க தேர்தல் ஆணையம் ஏன் அனுமதிக்கவில்லை?. ஆதார் அட்டை ஏன் இணைக்கப்படவில்லை? ரேஷன் அட்டை ஏன் இணைக்கப்படவில்லை?. பாரப்பட்சமின்றி தேர்தலை நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் வேலை” என்று கூறினார்.

தேஜஸ்வி யாதவ் பேசிக் கொண்டிருக்கும் போதே மாநில முதல்வர் நிதிஷ் குமார் உடனடியாக குறுக்கிட்டு, “நீ ஒரு குழந்தை. இது போன்ற விஷயங்களில் உனக்கு எதுவும் தெரியாது. சபையின் கடைசி கூட்டத்தொடருக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. சட்டமன்ற அலுவல்களை நடத்தவிடுங்கள். நீங்கள் என்ன முட்டாள்தனமாகப் பேச விரும்பினாலும், அதை தேர்தலின் போது உங்கள் மனநிறைவுக்கு ஏற்ப செய்யுங்கள். உங்கள் பெற்றோர் முதல்வர்களாக இருந்த போது எதுவும் செய்யவில்லை. பெண்களுக்காகவோ முஸ்லிம்களுக்காகவோ அல்லது இந்த சமூகத்திற்காகவோ எதுவும் செய்யவில்லை. நலன்களைப் பெற்ற ஒரே பெண் என்றால் அது அவரது தாய் மட்டுமே” என்று தெரிவித்தார்.

நிதிஷ் குமார் பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ பாய் விரேந்திரா சபைக்கு புறம்பான முகபாவனையை காட்டியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக சபாநாயகர் குறுக்கிட்டு தேஜஸ்வி யாதவை நோக்கி, “உங்களுடைய கருத்துக்களை சொல்ல நான் அனுமதிக்கிறேன். உங்கள் தரப்பில் உள்ள மற்றவர்களையும் பேச அனுமதிக்கிறேன். ஆனால் முதலில் நீங்கள் பாய் விரேந்திராவை மன்னிப்பு கேட்க செய்ய வேண்டும்” ஏன்று கூறினார். அதே போல் சட்டசபையில் கத்திக் கொண்டிருந்த பா.ஜ.க மூத்த தலைவரும் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவை நோக்கி, “துணை முதல்வராக இருந்தும் நீங்கள் இப்படி நடந்துகொள்வது அருவருப்பானது’ என்று கூறி சபையை ஒத்திவைத்தார். 

Bihar Nitish kumar Tejashwi Yadhav special intensive revision
இதையும் படியுங்கள்
Subscribe