Nitish Kumar elected as Bihar's next CM at NDA meeting
பீகாரின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் பாட்னாவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (19-11-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பா.ஜ.க மேலிட பொறுப்பாளர்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், கூட்டணிக் கட்சித் தலைவர்களான லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், பீகார் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் அடிப்படையில் பீகாரின் 10வது முறையாக நிதிஷ் குமார் பொறுப்பேற்க உள்ளார். அதன்படி, நேரடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரல் கடிதத்தை நிதிஷ் குமார் இன்று வழங்கவுள்ளார்.
ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரல் கடிதம் வழங்கிய பிறகு, நாளை அல்லது நாளை மறுநாள் அவர் புதிய முதல்வராக பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்வில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow Us