தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜி.கே.மூப்பனாரின் நினைவு தினம் இன்று (30-08-25) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கும் வகிக்கும் அனைத்து தலைவர்களும் பங்கேற்றனர். குறிப்பாக பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisment

இந்த நிகழ்வில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மூப்பனாருக்கு ஒரு ஆளுமை இருந்தது. அதனால் அவர் சொன்ன எந்த வார்த்தைக்கும் ஒரு மதிப்பு இருந்தது. அவருடைய வார்த்தையை ஏற்று அனைவரும் செயல்பட்டார்கள். தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு அவர் பிரதமர் ஆவதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவானது.

பிரதமராக ஆக வேண்டிய அந்த தருணத்தில் ஆகவிடாமல் தடுத்த சக்திகள் யார் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு தமிழ்நாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் புகழ் என்று திருப்பி திருப்பி பேசுபவர்கள், ஒரு தமிழனை பிரதமர் ஆக வேண்டிய அந்த தருணத்தில் ஆதரவு தராமல் தடுத்தார்கள். இதையும் நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவும் ஏதோ ஒரு தமிழருக்கு நடந்ததல்ல, ஒரு ஆளுமை உள்ள மூப்பனாரை தடுத்தார்கள். அது தான் தமிழருக்கு நடந்த ஒரு பெரிய துரோகம். தமிழ்நாட்டில் அவருடைய கொள்கைகளுக்கு ஏற்ற மாதிரி நல்லாட்சி அமைய நாம் எல்லோரும் முயற்சி செய்ய வேண்டிய தருணம் இது” என்று கூறினார்.