Nirmala Sitharaman criticized DMK in Coimbatore
கோயம்புத்தூரில் பா.ஜ.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (11-11-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “அனைத்து பணமும் வட இந்தியாவுக்கு போயிடுது, நாங்கள் 20 ரூபாய் வரி கட்டினால் அதிலிருந்து எங்களுக்கு 2 ரூபாய் கூட கையில் திருப்பி வருவதில்லை என திமுக தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கின்றனர். திமுக பல வருடங்களாக ஆளுமையில் இருந்த கட்சி. வரி கொடுத்தத்துக்கு ஈடாக வரி பணத்தை தமிழ்நாட்டுக்கு திரும்பி வரக்கூடிய நிலைமையில் ஆட்சி செய்கிறீர்களா?. கோயம்புத்தூர் தான் தமிழ்நாட்டுக்கு அதிகப்படியான வருவாய் கொடுக்கிறது. அதற்காக கோயம்புத்தூர் காரர்கள், எழுந்து நின்று எங்களுக்கு அனைத்து பணமும் எங்களுக்கு திருப்பி தர வேண்டும் என்று கேட்டால் மற்ற மாவட்டங்கள் என்ன ஆகும்?.
இப்படி ஒவ்வொன்றுக்கு யோசித்து திமுகவிடம் கேள்வி கேட்க வேண்டும். நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது எந்த மாவட்டத்துக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று நாம் அவர்களை தைரியமாக கேள்வி கேட்க வேண்டும். ஏனென்றால், பிரதமர் மோடி யாருக்கும் குறை வைக்காமல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். இங்கே வன்மம் இருக்கிறது. எங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால் உங்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டேன் என்ற வன்மத்தோடு ஆட்சி நடக்கிறது. அதை நாம் தைரியமாக கேள்வி கேட்க வேண்டும். அதற்கு நாலு விஷயத்தை படிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை வந்து சேரக்கூடாது என்பதற்காகவும் அதனால் பிரதமர் மோடிக்கு பெருமை சேர்ந்துவிடும் என்பதற்காகவும் பிரதமர் மோடி கொண்டு வரும் அனைத்து திட்டத்தையும் எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
அப்படி இல்லையென்றால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எல்லா வகையிலும் சென்று இல்லாத சட்டங்கள் எல்லாம் கூறி அதை தடுத்து நிறுத்துவதற்கான வேலையை செய்கிறார்கள். இல்லையென்றால் எப்ப பார்த்தாலும் போராட்டம் நடத்துகிறார்கள். கீழ இறங்கி கருப்பு கொடியை காட்டி வரவிடாமல் தடுக்கிறார்கள். கல்வி திட்டம் நாடு முழுவதும் எல்லாரும் எடுத்துக்கொண்டு கல்வியின் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே எதற்கு எடுத்தாலும் போராட்டம் நடத்துகிறார்கள். இன்றைக்கு நீட் மூலமாக ஏழை பிள்ளைகள் படிக்கிறார்கள். அதை கொண்டு வந்தது பிரதமர் மோடி. இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் போராட்டம் நடத்துவது, நீதிமன்றத்துக்கு போவது, சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவது என தமிழக மக்களுக்கு மத்திய அரசு மூலமாக வரக்கூடிய நல்ல திட்டங்களை வரவிடாமல் தடுக்கிறார்கள்” என்று கூறினார்.
Follow Us