உத்தரபிரதேசம் மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விபின் மற்றும் ரோஹித் பாட்டி சகோதரர்கள். இவர்கள் இருவருக்கும் சகோதரிகளான நிக்கி மற்றும் காஞ்சன் ஆகியோரை கடந்த 2016 ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர். திருமணத்திற்கு சொகுசு கார், ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள், 500 கிராம் தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவை வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டன. ஆனால், கொடுத்த வரதட்சணை போதாது என்று மேலும் வரதட்சணை கேட்டு, விபின் மற்றும் ரோஹித்தின் குடும்பத்தினர்  இரு சகோதரிகளைச் சித்திரவதை செய்து வந்தனர்.

Advertisment

இதனிடையே, நிக்கி தனியாக பியூட்டி பார்லர் வைத்து தொழில் செய்து வந்தார். அதில் வரும் முழு வருமானத்தையும் விபினும் அவரது தாயாரும் கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். மேலும், பெற்றோரிடம் சென்று ரூ.36 லட்சம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி அடித்துத் துன்புறுத்தி வந்தனர். நாளுக்கு நாள் எல்லை மீறிய அவர்களது தாக்குதல், கடந்த 21 ஆம் தேதி அன்று கொடூரத்தின் உச்சிக்கே சென்றது.

சம்பவத்தன்று, விபின் மற்றும் அவரது தாய் தயா இருவரும் சேர்ந்து பணம் கேட்டு நிக்கியின் தலைமுடியைப் பிடித்து அடித்து, உதைத்து, கொடூரமாகத் தாக்கினர். தடுக்க வந்த அவரது சகோதரி காஞ்சன் மீதும் தாக்குதல் நடத்தினர். அடிமேல் அடி வாங்கி நகர முடியாமல் இருந்த நிக்கியின் மீது எரியக்கூடிய திரவத்தை (ஆசிட்) ஊற்றி, லைட்டரால் தீ வைத்துக் கொளுத்தினர். இந்தக் கொடூரம் அனைத்தும் நிக்கியின் 8 வயது மகனின் கண் முன்னே அரங்கேறியது. உடல் முழுவதும் எரியும் தீயுடன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள படிக்கட்டுகளில் ஓடிய நிக்கி, நிலை தடுமாறி கீழே விழுந்தார். சத்தம் கேட்டு உடனே ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரது நிலை மோசமானதால், டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், நிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, நிக்கியின் சகோதரி காஞ்சன் கஸ்னா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், நிக்கியின் கணவர் விபின், அவரது மாமியார் தயா, மாமனார் சத்வீர் மற்றும் மைத்துனர் ரோஹித் பாட்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபினைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisment

விசாரணைக்காக விபினை காவல்துறையினர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, காவலர் ஒருவரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு, விபின் தப்பி ஓட முயன்றார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், விபினின் காலில் சுட்டு அவரைப் பிடித்தனர். அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிக்கியின் தந்தை இதுகுறித்து கூறுகையில், “ஆரம்பத்தில் சொகுசு கார் கேட்டனர்; அதை வாங்கிக் கொடுத்தோம். பின்னர் புல்லட் மோட்டார் சைக்கிள் கேட்டனர்; அதையும் வழங்கினோம். ஆனாலும், என் மகளைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தினர். சமீபத்தில் நான் எனக்காக ஒரு சொகுசு கார் வாங்கியதால், என் மருமகன் விபினுக்கு பொறாமை ஏற்பட்டது. அதைக் காரணம் காட்டி, என் மகளைத் துன்புறுத்தினர். என் பேரனின் கண் முன்னே அவளை அடித்து, துன்புறுத்தி, உயிரோடு எரித்துக் கொன்றனர். என் மூத்த மகளையும் அதே குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளோம்,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய நிக்கியின் சகோதரி காஞ்சன், “விபினும், அவரது தாயும் எனது சகோதரி நிக்கியை கடுமையாகத் தாக்கினர். அதைத் தடுக்கச் சென்ற என்னையும் அடித்தனர். அதில் நான் மயங்கி விழுந்துவிட்டேன். நானும், நிக்கியின் 8 வயது மகனும் அங்கே இருந்தோம். எங்கள் கண் முன்னே அவளைத் தீ வைத்துக் கொளுத்தினர். என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் மயங்கிக் கிடந்தேன்,” என்று கண்ணீர் மல்க கதறினார்.

Advertisment

நிக்கியின் 8 வயது மகன் கூறுகையில், “முதலில் அவர்கள் மம்மி மீது ஏதோ ஒரு பொருளை ஊற்றினார்கள். பின்னர் அறைந்து, லைட்டர் மூலம் தீ வைத்தார்கள்,” என்று வலி நிறைந்த வார்த்தைகளுடன் தெரிவித்தார்.

ஆனால், இதுகுறித்து பேசிய நிக்கியின் கணவர் விபின், அவளை நான் கொல்லவில்லை; அவளாதான் உயிரிழந்தார் என்றார். மேலும், உடல் ரீதியான தாக்குதல் குறித்து கேட்டதற்கு, யார் குடும்பத்தில் தான் சண்டை வராது. இது எல்லாம் வழக்கமானது தானே என கூலாக பதிலளித்தார்.

இதனிடையே, வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நிக்கியைக் கொடுமைப்படுத்தும் வீடியோவும், உடலில் எரியும் தீயுடன் படிக்கட்டுகளில் இருந்து இறங்கும் வீடியோவும் பார்ப்போரைப் பதறவைத்தன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பலரும் கடும் கண்டனம் தெரிவித்து, #JusticeForNikki என்ற ஹேஷ்டேக் மூலம் நீதி கேட்டு வருகின்றனர்.