கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளான வந்தனா பிரான்சிஸ் மற்றும் பிரீத்தி, ஜூலை 26 அன்று சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளுடன் துர்க் ரயில் நிலையத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பஜ்ரங் தளம் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் காவல்துறை, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சத்தீஸ்கர் மத சுதந்திரச் சட்டம், 1968 ஆகியவற்றின் கீழ் ஆள் கடத்தல் மற்றும் மதமாற்ற குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்து, கன்னியாஸ்திரிகள் இரண்டு பேர் மற்றும் அவர்களுடன் சென்ற சுக்மான் மந்தவி என்ற நபர் ஆகிய மூவரையும் கைது செய்து துர்க் மாவட்ட சிறையில் அடைத்தது. மேலும், அவர்களுடன் இருந்த மூன்று சிறுமிகள் மீட்கப்பட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனிடையே, இந்த மூன்று சிறுமிகளும் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கேரளாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தில் பயில்வதற்காக கன்னியாஸ்திரிகளுடன் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பஜ்ரங் தள உறுப்பினர்கள், சிறுமிகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காக கன்னியாஸ்திரிகள் அழைத்துச் செல்வதாகக் குற்றம்சாட்டி, ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் கேரளாவில் கிறிஸ்தவ சமூகத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள கிறிஸ்தவ சபைகள் மற்றும் சிறுபான்மை அமைப்புகள் கன்னியாஸ்திரிகளின் கைதை கடுமையாகக் கண்டித்துள்ளன. ஆளும்  கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் இந்த நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளன. சிறுமிகளின் குடும்பத்தினர், நாராயண்பூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள கடிதத்தில், தங்கள் மகள்கள் விருப்பத்துடன் கன்னியாஸ்திரிகளுடன் சென்றதாகவும், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அவர்களை அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசையும் சத்தீஸ்கர் அரசையும் கண்டித்து, ஜூலை 29, அன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பான கேள்விகளை கேரள எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களும் முன்வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள், ஜாமீன் கோரி துர்க் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி அனிஷ் துபே முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால், ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகள் சம்பந்தமான இந்த வழக்கு, அமர்வு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக்குவதாகவும், இது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நீதிமன்றத்தின் கீழ் வருவதாகவும் கூறி, நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். அதன் பின்னர், என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இந்த மனு மீதான விசாரணை இன்று (02-08-25) என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிராஜுதீன் குரேஷி முன்பு வந்தது. அப்போது, கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளான பிரீத்தி மற்றும் வந்தனா பிரான்சிஸ் மற்றும் சுக்மான் மந்தவி ஆகிய மூவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் மூவரும் தலா ரூ.50,000 வழங்க வேண்டும் என்றும், தங்கள் பாஸ்போர்ட்களை ஒப்படைக்க வேண்டும் வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.