புதுக்கோட்டையில் குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உள்பட 3 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கப்பத்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் சுந்தராஜ் மகள் பாண்டிஸ்ரீ (14) 9 ம் வகுப்பு படிக்கிறார். சேகர் மகள் கனிஷ்கா (13) 8 ம் வகுப்பு மாணவி. இன்று பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்ற நிலையில் பள்ளி விடுமுறையில் இருந்த தோழிகளான பாண்டிஸ்ரீயும், கனிஷ்காவும் அதே பகுதியில் உள்ள வன்னியனேந்தல் கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
சகோதரியும் அவரது தோழியும் குளிக்கப் போய் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை என்று கனிஷ்காவின் சகோதரி தேடிப் பார்த்தபோது இருவரது உடைகளும் குளக்கரையில் கிடந்துள்ளது. ஆனால் இருவரையும் காணவில்லை. குளிக்கச் சென்ற தோழிகளை காணவில்லை என்று வீட்டிற்கு வந்து கூறியுள்ளார்.
உறவினர்கள் கண்மாய்க்குள் இறங்கி தேடியபோது பாண்டிஸ்ரீயும் கனிஷ்காவும் இறந்த நிலையில் உடல்களை மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்றனர். ஊரே கூடி நின்று கதறியது. பல வருடங்களாக அந்த கண்மாயில் குளிக்கும் சிறுமிகள் இன்று எப்படி மூழ்கி இருப்பார்கள் என்று கதறி அழுதனர். தகவலறிந்து வந்த நமணசமுத்திரம் போலீசார் விரைந்து சென்று மாணவிகளின் சடங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே திருமயம் பகுதியில் தான் நேற்று 2 கல்லூரி மாணவர்கள் பைக் விபத்தில் உயிரிழந்தனர். இன்று இரு பள்ளி மாணவிகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. இதே போல திருக்கோகர்ணம் காவல் சரகம் மாராயப்பட்டி கிராமத்தில் செல்வராஜ் என்பவரின் மனைவி கடைக்குச் சென்ற போது அவருக்கு தெரியாமலேயே அவரது ஒன்றரை வயது மகள் ராசாத்தியும் கடைக்கு செல்வது போல் சென்றவர் வழி தவறி குவாரி பள்ளத்திற்கு சென்று விழுந்துள்ளார். தங்கள் குழந்தையை நீண்ட நேரமாக காணவில்லை என்று எங்கும் தேடியவர்கள் பிறகு குழந்தையில் கால் தடம் பார்த்துச் சென்ற போது ஆழமான குவாரி பள்ளத்தில் குழந்தை சடலம் மிதந்து மீட்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 3 பெண் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் மாவட்டத்தையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/30/5939-2025-12-30-22-53-30.jpg)