வங்கக்கடலில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (31/07/2025) அறிவித்திருந்தது. 

அதில், 'வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் கட்டத்தில் வடதமிழ்நாட்டில்  பெரும்பாலான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கும். தென்மேற்கு பருவ மழையின் முதல்கட்டத்தில் தமிழ்நாட்டில் ஜூன், ஜூலையில் இயல்பை விட 12 சதவிகிதம் மழைப்பொழிவு குறைந்துள்ளது. ஜூன் 1 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை இயல்பான மழை அளவு 119 மில்லி மீட்டர் என்ற நிலையில் பதிவான மழை அளவு 104 மில்லி மீட்டர் ஆக இருக்கிறது. தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் பகுதி ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தொடங்கி தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பொழிய வாய்ப்பு இருக்கிறது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி 'ஆகஸ்ட் 4-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி திருவாரூர், நாகை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். இப்படியாக அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு பரவலாக வாய்ப்பிருக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.