தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச்சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு கூடுதல் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டது.
இருப்பினும் விஜய்யின் வீட்டை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். அதோடு அவர்கள், “விஜய் வெளியே வரவேண்டும்; இறந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; இந்த உயிரிழப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்” என முழக்கமிட்டனர். அப்போது அவர்களைச் சுற்றிவளைத்த காவல்துறையினர் அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி தலைமை அலுவலகத்திற்கு இன்று (28.09.2025) இரவு இ - மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது குறித்து உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கும், தீயணைப்புத் துறை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின்பு பல்வேறு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் விஜய் மீது எழுந்துள்ள நிலையில் அவரது இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியிலும், அவரது கட்சியினர் இடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சென்னையில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இலங்கை தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.