பங்களாதேஷில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஜூலை எழுச்சியின் முன்னணித் தலைவர் உஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதன் நீட்சியாக புரோதோம் அலோ மற்றும் தி டெய்லி ஸ்டார் ஆகிய செய்தி நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குளோபல் டிவி பங்களாதேஷ் அலுவலகத்திற்கும் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே, டாக்காவில் உள்ள குளோபல் டிவி முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பல இளைஞர்கள் அந்த அலுவலகத்துக்குள் சென்று அதன் செய்திப் பிரிவுத் தலைவர் நஸ்னின் முன்னியைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு செய்யத் தவறினால், புரோதோம் அலோ மற்றும் தி டெய்லி ஸ்டார் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கதியையே உங்கள் அலுவலகத்திற்கும் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளனர். ஆனால் அந்த ஆவணத்தில் கையெழுத்திட நிர்வாக இயக்குநர் மறுத்துவிட்டார். மேலும் அவாமி லீக் கட்சியுடன் நஸ்னினுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நிர்வாக இயக்குநர் அந்த இளைஞர்களிடம் தெளிவுபடுத்தினார். இந்தக் கருத்தை அந்த இளைஞர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.  

Advertisment

இது பற்றி நஸ்னின் பேசிய போது, ‘சம்பவம் நடந்தபோது தான் அலுவலகத்தில் இல்லை. புரோதோம் அலோ மற்றும் தி டெய்லி ஸ்டார் போன்ற பத்திரிகைகளாலேயே எங்களை எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் ஒன்றுமே இல்லை, என்று அந்த இளைஞர்கள் கூறினார்கள்’ எனத் தெரிவித்தார். கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து நீக்கிய 2024 மாணவர் எழுச்சியின் போது முக்கியத்துவம் பெற்ற மாணவர் எழுச்சித் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.