தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ - மெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுச்சேரியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகை, புதுச்சேரி முதல்வர் இல்லம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு, சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் உள்ள சுங்க தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. 

Advertisment

அதே போன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லம், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை, பா.ஜ.க தலைமை அலுவலகம், நடிகைகள் திரிஷா, நயன்தாரா மற்றும் நடிகர் எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் இல்லத்திற்கும், சென்னையில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இலங்கை தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதே சமயம் கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து நக்கீரன் அலுவலகம், தவெக தலைவர் விஜய்யின் வீடு, பிரபல தொலைக்காட்சி செய்தி நிறுவன, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. 

Advertisment

இந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்திற்கு இன்று (10.10.2025) காலை ஈ - மெயிலில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் தங்கள் நிறுவனத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அந்த நிறுவனம் சார்பில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தாம்பரத்தில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குச் சென்று நிறுவனம் முழுவதுமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. 

அதே போன்று ஓஎம்ஆர் சாலையில் உள்ள மேட்டுக்குப்பம் என்ற பகுதியில் உள்ள பிரபல தனியார் ஐடி நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் (T.C.S. - டிசிஎஸ்) நிறுவனத்திற்கும் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. மேலும் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் என்ற ஐடி நிறுவனத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. எனவே ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள 3 ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment