தொடர்ந்து அதிகரித்து வரும் போதைக் கலாச்சாரத்தினால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து வருவதாக பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு உடல் நலத்தையும், எதிர்காலத்தையும் சீரழிக்கும் போதைகலாச்சாரத்தின் பின்னால் செல்வதை இளைஞர்களும், மாணவர்களும்  தவிர்க்க வேண்டுமென  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வீடியோ வெளியிட்டு போதைப் பொருட்களுக்கு எதிராக  விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் காவல்துறையும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து போதைப்பொருட்கள் விற்கப்படுவதையும், பயன்படுத்துவதையும் தடுத்து வருகிறது.

Advertisment

இருப்பினும் இந்த கட்டுப்பாடுகளையும் மீறி சில நபர்கள் சட்டத்திற்குப்  புறம்பாக போதைப்பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பட்டரவாக்கத்தில் பெட்டிக்கடை ஒன்றில் போதை சாக்லேட்டுகள் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப்  பதுக்கி வைத்திருந்ததாகக் கூறி ரவிந்திரகுமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் 5 லட்சம் மதிப்புள்ள 15 கிலோ போதை சாக்லேட்டுகள், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப் பொருட்கள் வருகின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விற்பனை செய்ய இருந்ததாகவும், இவை ஒடிசாவிலிருந்து ரயில் மூலமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோல் புத்தாண்டு கொண்டாட்டத்தை டார்கெட்டாக வைத்து போதைப் பொருள் விற்கப்பட இருக்கிறதா என்பது குறித்து தீவிரமாக போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  

Advertisment