மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரியும் 26 வயது பெண்ணை, ஒரு நபர் மருத்துவமனையில் கடுமையாக தாக்கிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த சம்பவம் தொடர்பான முழு வீடியோவும் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தி ஸ்ரீ பால் சிகிச்சைசலாய என்ற தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வரவேற்பாளராக சோனாலி பிரதீப் கலசாரே என்ற 26 வயது இளம்பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று, மருத்துவர் ஒரு பிரதிநிதியுடன் ஒரு சந்திப்பில் இருந்ததால் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என சோனாலியிடம் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, மருத்துவமனையின் அனுமதி இல்லாமல் மருத்துவ அறைக்குள் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சோனாலியிடம் அந்த நபர் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், சோனாலியை கடுமையாக உதைத்து மருத்துவமனையின் வரவேற்புப் பகுதி முழுவதும் அவரது தலை முடியைப் பிடித்து இழுத்துச் சென்றார். இறுதியில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பிற நோயாளிகளின் உறவினர்களால் சோனால் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சி நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து சோனாலி மன்பாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டு போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் கோகுல் ஜா என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான முழு சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி நடந்த சம்பவம் குறித்த புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. நேற்று வெளியான வீடியோவில், வாக்குவாதத்தைத் தொடர்ந்து கோகுல் ஜா அந்த பெண்ணை தாக்குவதைக் காட்டுகிறது. சிசிடிவியின் முழு காட்சியாக வெளியிடப்பட்ட புதிய வீடியோவில் தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதைக் காட்டுகிறது. அந்த முழு வீடியோவில், கோகுலுக்கும் சோனாலிக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அதன் பின்னர், சோனாலி தனது மேசையில் இருந்து வெளியே வந்து கோகுலின் மைத்துனியின் கன்னத்தில் அறைந்தார். இதில் கோபப்பட்ட கோகுல், சோனாலியை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது.

Advertisment

இந்த விவகாரம் குறித்து கோகுலின் பெற்றோரும் அவரது மூத்த சகோதரர் ரஞ்சித் ஜாவும் மன்பாடா காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்த பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.