தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 21வது அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி (14.08.2025) நடைபெற்றது. அதில், தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு, அவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி செய்யப்படும். மேலும் தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ. 10 லட்சம் காப்பீடு, 30 ஆயிரம் வீடுகள் அல்லது குடியிருப்புகள் கட்டித்தரப்படும். தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி, தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் தூய்மைப்பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளை இலவசமாக உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 14.08.2025 அன்று நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு நிதித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்குவது குறித்த அறிவிப்பின் விவரம் பின்வருமாறு: தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுக்கு என்று தனியாக சிறப்புமிக்க திட்டமாக உணவு வழங்கும் திட்டத்தினை துவங்கி வைக்க உள்ளார். வரும் 15ஆம் தேதி (15.11.2025) இத்திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் துவங்கி வைக்கப்பட உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கிடையே இது நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எத்தனையோ காலகட்டங்களில் தூய்மை பணியாளர்கள் எந்த ஒரு உணவும் இல்லாமல் 6 மணி நேரம், 7 மணி நேரம் பணியில் ஈடுபடக்கூடிய சூழல் இருந்தது. இன்றைக்கு அவர்களுக்காகத் தனித்துவமாக இத்திட்டத்தைக் கொண்டு வரப்பட்டு 15ஆம் தேதி செயலுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/12/gcc-2025-11-12-10-01-51.jpg)
விக்டோரியா மால் மறு சீரமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறு பணிகள் முடிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அதுவும் இந்த மாதத்துக்குள் (நவம்பர்) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் துவங்கி வைக்கப்பட உள்ளது. நவம்பர் மாதம் மழை பொறுத்த வரையில் கடந்த முறையை விட இந்த முறை மழை கொஞ்சம் குறைவாகத் தான் பெய்துள்ளது. வரக்கூடிய 5 நாட்களில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலமாகத் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி சார்பாக ஆகஸ்ட் மாதம் முதலே முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மழை வரக்கூடிய சூழலைப் பார்த்துத்தான் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Follow Us