ஓய்வூதியம் தொடர்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி (03.01.2026) வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டாப்ஸ் - TAPS) கீழ் மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 22ஆவது அமைச்சரவைக் கூட்டம் கடந்த 6ஆம் தேதி (06.01.2026) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட டாப்ஸ் (TAPS) எனப்படும் தமிநாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கூடுதல் தலைமைச் (நிதித்துறை) செயலாளர் உதயச்சந்திரன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். இந்த ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1ஆம் தேதி (01.01.2026) முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us