Advertisment

'விடுதிகளுக்கு புதிய பெயர்; உரிமைகள், சலுகைகள் அப்படியே மாற்றமின்றி தொடரும்'-தமிழக அரசு

a4322

'New name for hostels; rights and privileges will continue unchanged' - Tamil Nadu government Photograph: (tngovt)

'தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அரசு சார்பில் வெளியான அறிக்கையில், 'இரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான் திராவிட இயக்கத்தின் தோற்றத்துக்கு அடிப்படையான கருதுகோள்கள்! இத்தகைய சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியைத்தான் 'திராவிட மாடல் ஆட்சி' என்ற அடையாளத்துடன் நாம் நடத்தி வருகிறோம். 'எல்லார்க்கும் எல்லாம்' கிடைக்கும் சமநீதியை நிலைநாட்டுவதாக நமது அனைத்துத் திட்டங்களும் முயற்சிகளும் அமைந்துள்ளன. சாதியின் பேரால், மதத்தின் பேரால், பொருளாதார வலிமையின்மையால் எந்த வாய்ப்பும் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதை மனதில் வைத்தே. அனைவருக்கும் பொதுவான சம வாய்ப்புகளை வழங்கி, அனைத்துச் சமூகத்தையும் மேலே கொண்டு வர முயற்சித்து வருகிறோம். அனைத்துத் துறை வளர்ச்சியானது, அனைத்து சமூக வளர்ச்சியாக இன்று விரிவடைந்து வருவதையும் பார்க்கிறோம்.

சாதி வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் முற்றிலுமாக விலக்கும் பயணத்தின் பல்வேறு படிநிலைகளை நாம் படிப்படியாகத் தாண்டி வர வேண்டும். இதற்கான முயற்சிகளில் திராவிட மாடல் அரசு தொடர்ந்து பயணித்து வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 29.04.2025 அன்று நான் பேசும் போது, "இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாகக் காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் இது மாறியிருப்பதால் இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டேன்.

இதனைத் தொடர்ந்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கைகளில் மிக முக்கியமானது, "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதிப் பெயரில் இறுதி எழுத்தில் முடிவடையும் 'N' மற்றும் 'A' என்பதற்குப் பதிலாக 'R' என பெயர் மாற்றம் செய்து மக்களுக்கு உரிய மரியாதையைக் கிடைக்க வழி செய்யும் வண்ணம் உரிய சட்டம் இயற்ற, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்பதாகும்.

Advertisment

கடந்த 25.6.2025 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் வன்முறை உணர்வுகள் உருவாவதை தடுக்கவும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்க்கவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

 

 

a4318
'New name for hostels; rights and privileges will continue unchanged' - Tamil Nadu government Photograph: (dmk)

 

பள்ளிகளில் ஏற்படும் சாதிய மோதல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது. நீதியரசர் சந்துரு அவர்கள் மிக முக்கியமான பல்வேறு பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு வழங்கி இருக்கிறார். சாதி முன்னொட்டு பெயர்களுடன் அரசு பள்ளிகள் இருப்பதை நீக்க வேண்டும். அரசு, தனியார் பள்ளிகளின் பெயர்களோடு உள்ள சாதி முன்னொட்டுகளையும் பின்னொட்டுகளையும் நீக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பள்ளியின் பெயரில் சாதி இருக்கக் கூடாது. தனிமனிதர் பெயரில் வைத்திருந்தால் அந்தப் பெயரோடும் சாதி இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டு இருந்தது. இதனை தமிழ்நாடு அரசு நன்கு பரிசீலித்தது.

நமது சமுதாயத்தின் பல்வேறு பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் தொடர்ந்து கல்விப் பயின்றிட. நமது மாநிலமெங்கும் பல்வேறு அரசுத் துறைகளின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறையின்கீழ் செயல்பட்டு வரும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 41,194 மாணவ மாணவிகளும். 455 மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 26,653 மாணவ மாணவிகளும், 157 சீர்மரபினர் விடுதிகளில் 9,372 மாணவ மாணவிகளும், 20 சிறுபான்மையினர் நல விடுதிகளில் 1.250 மாணவ மாணவிகளும் தங்கிப் பயின்று வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,332 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் 98.909 மாணவ மாணவியர்களும், 48 பழங்குடியினர் விடுதிகளில் 2,190 மாணவ மாணவியர்களும் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

இவ்வாறு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,739 விடுதிகளில் 1,79,568 மாணவ மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த மாணவ மாணவிகளின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நடவடிக்கைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான உணவுச் செலவு மற்றும் பல்வேறு படிகளை உயர்த்தியது. விடுதிகளின் கட்டமைப்பு மேம்பாடு. அவர்களுக்குச் சிறப்புத் திறன் பயிற்சிகள் போன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகளின் காரணமாக மாணவர்களின் கற்கும் திறன் மேம்பட்டு உள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடித்தட்டுக் குடும்பங்களைச் சார்ந்த இந்த மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் அதே வேளையில், நமது எதிர்கால சமுதாயத்தை ஒரு சமத்துவ சமூகமாக உருவாக்கிட. சாதி சமய உணர்வுகளைக் களைவது இன்றியமையாதது. இந்த நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் 'சமூகநீதி விடுதிகள்' என்ற பொதுப் பெயரால் இனி அழைக்கப்படும். விடுதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதே தவிர. மாணர்களுக்கான உரிமைகள், சலுகைகள், உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.

இவ்விடுதிகளில் நமது பெரும் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அத்தலைவர்களின் பெயரோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும்.தற்கால இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட இந்த முயற்சிகள் அடித்தளம் அமைக்கும். சமூகநீதி சமநீதி - சட்ட நீதி ஆகியவை அனைவர்க்கும் பொது என்ற நிலையை உருவாக்க திராவிட மாடல் அரசு தொடர்ந்து பங்காற்றும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

dmk Hostel m.k.stalin TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe