மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ஆம் தேதி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இன்று (17.08.2025) காலை 08:30 மணி அளவில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வருகின்ற 19-ஆம் தேதி மாலையில் தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளைக் கடக்கக் கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதன் காரணமாக, தமிழகத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 23-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.