கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 13ஆம் தேதி (13.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தார். இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதாவது உயிரிழந்த 41 பேரின் இல்லத்திற்கும் நேரில் சென்று அவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என விஜய் திட்டமிட்டு கட்சியினரிடம் கூறியிருந்தார். அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டுமானால் கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் என 5 மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எனவே விஜய் சாலை மார்க்கமாகச் செல்லும் போதும் மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் நாமக்கல் அல்லது கரூரில் உள்ள மண்டபத்தில் சந்திக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மகாபலிபுரத்திற்கு வரும் 27ஆம் தேதி (நாளை மறுநாள் - திங்கட்கிழமை) நேரில் வரவழைத்து சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 18ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், “துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் சொன்னது போலவே, சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்” எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow Us