சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் காவலர்களால் தாக்கி கொடூரமாக உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் புதிதாக பதியப்பட்ட எப்ஐஆரில் சில அதிர்ச்சி தரும் தகவல்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி சுகுமார் மாஜிஸ்திரேட்டுக்கு கொடுத்துள்ள புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த வழக்கில் எட்டு உண்மைகள் தெரிய வந்துள்ளது.
அவை பின்வருமாறு
1) இவ்வழக்கின் சம்பவத்தில் இறந்து போன அஜித்குமார் என்பவர் திருப்புவனம் மடப்புரம் ஸ்ரீபத்திர காளியம்மன் கோவிலில் தற்காலிக செக்யூரிட்டியாக வேலை செய்து வந்துள்ளார்.
2) கடந்த 27.06.2025 ம் தேதி அன்று இவ்வழக்கின் சாட்சிகளில் ஒருவரான நிக்கிதா என்பவர் மேற்படி கோவிலில் சாமி கும்பிட வேண்டி காரில் வந்துள்ளார். மேலும் மேற்படி நிக்கிதா தனது 9 1/2 பவுன் தங்க நகைகளை காரில் வைத்திருந்துள்ளார். அது சமயம் போக்குவரத்து காரணமாக மேற்படி நிக்கிதா தனது காரை பார்க்கிங் செய்யுமாறு மேற்படி கோவில் பணியாளரான இறந்து போன அஜித்குமாரிடம் சொல்லி அதன் படி அஜித்குமார் காரை வேறு நபர் மூலமாக நிறுத்தி விட்டு வந்துள்ளார். பின்னர் நிக்கிதா வந்து அஜித்குமாரிடம் சொல்லி வேறு ஒருவர் மூலமாக --அஜித்குமார் காரை எடுத்து வந்து சாவியை நிக்கிதாவிடம் கொடுத்துள்ளார். அது சமயம் காரில் பார்த்த போது வைத்திருந்த 9 1/2 பவுன் தங்க நகைகளையும் மற்றும் பணத்தையும் காணவில்லை என்பதை தெரிந்து நிக்கிதா அஜிக்குமாரிடம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே நிக்கிதா அந்த கோவில் நிர்வாகத்திடம் சொல்லி அங்கு வைத்து விசாரித்துள்ளனர். அப்போதும் அஜித்குமார் மறுத்துள்ளார்.
3. இதன் காரணமாக மேற்படி நிக்கிதா மற்றும் மேற்படி கோவில் ஊழியர்கள் அஜித்குமாரை அழைத்து கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளனர். போலீசார் அஜித்குமாரை விசாரித்துள்ளனர். இந்த விசாரணையின் போதும் அஜித்குமார் மறுத்துள்ளார். இதன் காரணமாக மீண்டும் விசாரணைக்கு வர வேண்டி அஜித்குமாரை சார்பு ஆய்வாளர் அவர்களால் காவல் நிலையத்திலிருந்து இரவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்படி CSR No. 832/25 பேரில் 28.06.2025 ம் தேதி காலை 10:30 மணிக்கு திருப்புவனம் காவல் நிலைய குற்ற எண். 302/25 U/S 303(2) BNS வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. இந்நிலையில் இந்த திருட்டு புகார் குறித்து மானாமதுரை உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் கிடைக்க பெற்று தனது உட்கோட்டத்தில் உள்ள தனிப்படை பிரிவினர்கள் ஆகிய 1) கண்ணன் த.கா 2361, பழையனூர் காவல் நிலையம், சிவகங்கை மாவட்டம் 2.) பிரபு த.கா 760. மானாமதுரை காவல் நிலையம், சிவகங்கை மாவட்டம்.3.) ஆனந்த் த.கா 870 சிவகங்கை போக்குவரத்து காவல் நிலையம் சிவகங்கை மாவட்டம்4) ராஜா மு.நி.கா 1033. பூவந்தி காவல் நிலையம் சிவகங்கை 5) ராமச்சந்திரன் மு.நி.கா 2517. திருப்பத்தூர் டவுன் காவல் நிலையம் சிவகங்கை மாவட்டம். 6) சங்கர மணிகண்டன் மு.தி.க 735 திருப்புவனம் காவல் நிலையம் ஆகியோர்களுக்கு தகவல் கொடுத்து வழக்கமான அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
5. இதன் பேரில் மேற்படி தனிப்படையினர்கள் 27.06.2025 ம் தேதி இரவு திருப்புவனம் காவல் நிலையம் வந்து மேற்படி நிக்கிதாவை விசாரித்து பின்னர் மேற்படி நிக்கிதா அஜித்குமார் என்பவர் தான் தனது தங்க நகைகளையும் பணத்தையும் திருடியதாக கூறியதின் பேரில் அது சமயம் இரவில் திருப்புவனம் காவல் நிலையத்திலிருந்து வெளியில் வந்த மேற்படி அஜித்குமார் என்பவரை மேற்படி தனிப்படையினர் ஆறு பேரும் அழைத்து தங்கள் வசம் வைத்து வெளியில் கொண்டு சென்று விசாரித்துள்ளனர். மேலும் அஜித்குமார் என்பவர் சொன்ன தகவல் படி அஜித்குமார், தம்பி நவீன்குமார், அருண், தினகரன், யோகேஷ்வரன் ஆகியோர்களை தனிப்படையினர் பிடித்து தங்கள் பொறுப்பில் வைத்து கொண்டு தன்னிச்சையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் மேற்படி தனிப்படையினர்கள் அஜித்குமார் தங்களிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை சொல்லி அலைக்கழிப்பு செய்வதாக எண்ணி மேற்படி அஜித்குமாரை 27.06.2025 இரவு முதல் மற்றும் 28.06.2025 மாலை வரை மேற்படி தனிப்படையினர் வைத்திருந்ததுடன் இதில் தனிப்படையை சேர்ந்த 1.ராஜா. 2.ஆனந்த் 3.சங்கரமணிகண்டன் 4.பிரபு 5.கண்ணன் ஆகியோர்கள் அஜித்குமாரை ஒரு தோப்பில் வைத்து பின்னர் சம்பவ இடமான மேற்படி கோவில் அலுவலகத்திற்கு பின்புறமுள்ள மாட்டு கொட்டத்தில் வைத்து திடீரென்று தங்களுக்கு ஏற்பட்ட கோபத்தினாலும் மற்றும் நகைகளை மீட்க வேண்டும் என்ற எண்ணத்திலும் மேற்படி தனிப்படை ஐந்து பேரும் பிளாஸ்டிக் பைப்பால் மாறி மாறி அடித்துள்ளனர். இதனால் அஜித்குமாருக்கு பல இடங்களில் வெளிப்படையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சமயத்தின் போது தனிப்படையில் இருந்த ராமச்சந்திரன் என்பவர் TN6360491 டெம்போ டிராவலர் வாகனத்திலேயே இருந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவர் ஈடுபடவில்லை. மேலும் இந்த சம்பவம் நடக்கும் போது மேற்படி தனிப்படையினர் விசாரணைக்காக வைத்திருந்த நவீன்குமார், அருண், யோகேஸ்வரன், தினகரன் மற்றும் கோவில் ஊழியர்கள் பெரியசாமி, சக்தி, கார்த்திக்ராஜா ஆகியோர்களும் இருந்து சம்பவத்தை நேரில் கண்டுள்ளனர்.
6. இவ்வாறான தாக்குதல் காரணமாக அஜித்குமார் வயது 30/25 த.பெ.பாலகுரு, நடுத்தெரு மடப்புரம் யோகேஸ்வரன், தினகரன் ஆகியோர்களை மேற்படி தனிப்படையில் இருந்த கண்ணன் மற்றும் ராமச்சந்திரன் இருவரும் திருப்புவனம் காவல் நிலையம் bind Over செய்து வெளியில் அனுப்பியுள்ளனர்.
7. இவ்வாறான தாக்குதல் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அஜித்குமாரை மேற்படி முதற்கட்டமாக திருப்புவனம் அரசு மருத்துவமனை, பின்னர் சிவகங்கை மருத்துவமனை அழைத்து சென்று பின்னர் அங்கிருந்து தனிப்படை காவலர்கள் ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய இருவரும் அஜித்குமார் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து 28.062025-ஆம் தேதி 23 :15 மணிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர் பரிசோதித்து விட்டு அஜித்குமார் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
8. இவ்வாறாக தனிப்படை காவலர்கள் 1.ராஜா 2. ஆனந்த 3.சங்கர மணிகண்டன் 4.பிரபு 5.கண்ணன் ஆகிய ஐந்து பேரும் குற்ற எண். 302/25 திருட்டு வழக்கில் சந்தேகத்திற்குள்ளான நபரான அஜித்குமார் என்பவரை கன்னிச்சையாக தங்கள் பொறுப்பில் வைத்திருந்ததும், அஜித்குமார் குற்றத்தை மறுத்து தங்களை அலைக்கழிப்பு செய்வதாகவும் எண்ணி இவர்களுக்கு திடீரென்று ஏற்பட்ட கோபம் காரணமாகவும் மேலும் அஜித்குமாரை அடித்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்ற ஆத்திரத்துடனும் மேலும் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கினால் மரணம் ஏற்படும் என்று தெரிந்தும் மேற்படி ஐந்து தனிப்படை காவலர்கள் சேர்ந்து அஜித்குமாரை தாக்கி அவருக்கு மரணத்தை ஏற்படுத்தி கொலைக்குற்றம் புரிந்துள்ளனர் என்பது எனது விசாரணையில் தெளிவாக புலனாவதால் இன்று 30.06.2025 ம் தேதி இவ்வழக்கின் சட்டப்பிரிவு 196(2)(a) BNSS ல் இருந்து சட்டப்பிரிவு 103(1) BNS பிரகாரம் மாறுதல் செய்து சட்ட மாறுதல் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. மேலும் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கைக்கான புகார்தாரர் கண்ணன் என்பவர் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி என விசாரணையில் கண்டறியப்பட்டதால் அவரை வாதியிலிருந்து நீக்கம் செய்து இவ்வழக்கின் விசாரணையில் கண்டறியப்பட்ட சம்பவ இட நேரடி சாட்சியான நவீன்குமார் என்பவரே வாதியாக பாவிக்கப்படுகிறது என்ற விவரம் பணித்து அறிக்கை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.