உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த மே 14ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்ற பி.ஆர்.கவாய், வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார்.
அதனால் தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்யகாந்த்தை நியமிக்க, பி.ஆர்.கவாய் கடந்த 27ஆம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை மத்திய அரசுக்கு பி.ஆர்.கவாய் வழங்கினார். அந்த கடிதத்தை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பும். அதனை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்று புதிய தலைமை நீதிபதி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சூர்யகாந்த்தை, இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வரும் நவம்பர் 24ஆம் தேதி தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார். இவர் வரும் பிப்ரவரி 9, 2017ஆம் வரை தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
கடந்த 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதியன்று ஹரியானா மாநிலத்தின் பெட்வார் கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சூர்யகாந்த், 1981ஆம் ஆண்டு ஹிசாரில் உள்ள அரசு முதுகலை கல்லூரியில் பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து, 1984இல் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அதே ஆண்டில் ஹிசார் மாவட்ட நீதிமன்றங்களில் தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். 1985ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாறிய அவர், அரசியலமைப்பு, சேவை மற்றும் சிவில் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றார். ஜூலை 7, 2000ஆம் ஆண்டின் ஹரியானாவின் இளைய அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். மேலும், அங்கு மூத்த வழக்கறிஞராகவும் மாறினார். அட்வகேட் ஜெனரலாக பணியாற்றிய அவர் ஜனவரி 9, 2004ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
நீதிபதியான அவர், 2007 முதல் 2011 வரை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) நிர்வாகக் குழுவில் பணியாற்றினார். அதன் பின்னர், அவர் 2011 ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றதோடு மட்டுமல்லாமல் வகுப்பில் முதலிடம் பெற்றார். அதனை தொடர்ந்து, அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், மே 24, 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். மே 4, 2025 முதல், அவர் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும், இந்திய சட்ட நிறுவனத்தின் பல குழுக்களிலும் பணியாற்றி வருகிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியது செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வில், சூர்ய காந்த் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற அமர்விலும் சூர்ய காந்த் இடம் பெற்றுள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட வழங்கறிஞர் சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சூர்ய காந்த் வழங்கியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/30/suryakanth-2025-10-30-21-57-57.jpg)