நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் இந்த உத்தரவை மீறிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. இதற்கு நாடெங்கிலும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று (08.09.2025) அங்குப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதாவது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தும் போராட்டமானது அந்நாட்டுத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் முற்றுகையிடப்பட்டன.
அதே சமயம் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். அதோடு 300க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர். மற்றொருபுறம் நேபாள அரசு இந்தப் போராட்டம் தொடர்பாக அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினரும் களம் இறக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுடுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்களானது வெளியாகியிருந்தன. இந்நிலையில் நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 2வது நாளாக இன்றும் (09.09.2025) இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் தான் பதவி விலகிய பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம் நேபாளத்தில் நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், அரசு அலுவலகங்கள், அமைச்சர்கள் வீடுகளைக் குறிவைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் நேபாளத்தில் மூன்று மூத்த அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதாவது உள்துறை அமைச்சர் நேற்று பதவி விலகிய நிலையில், மேலும் 2 அமைச்சர்கள் இன்று பதவி விலகி உள்ளனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரே விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. விமான நிலையம் அருகே போராட்டக்காரர்களால் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்ததால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.