மத்தியப் பிரதேச போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட தமிழர்? கண்ணீர் வடிக்கும் குடும்பம்!

103

நெல்லை மாவட்டம், இராதாபுரம் அருகே உள்ள சுண்டவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் மாசானமுத்து (வயது 44). இவருக்கு மனைவி சாந்தகுமாரி, இரண்டு மகள்கள், மற்றும் ஒரு மகன் உள்ளனர். கூலித் தொழிலாளியாக வாழ்க்கை நடத்தி வந்த மாசானமுத்து, வறுமையின் காரணமாக மும்பை அருகே புனே நகரத்தில் உள்ள ஒரு இட்லிக் கடையில் வேலை செய்யச் சென்றார். தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் பேசவோ, எழுதவோ தெரியாத இவர், 20 நாட்கள் அங்கு பணிபுரிந்தார். ஆனால், தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டதால், தமிழ்நாடு விரைவு ரயில் மூலம் சென்னை திரும்புவதற்காக மும்பை ரயில் நிலையத்திற்கு பயணச் சீட்டு எடுக்கச் சென்றிருக்கிறார்.

மும்பை ரயில் நிலையத்தில், தமிழ்நாடு விரைவு ரயிலில் ஏறுவதற்குப் பதிலாக, தவறுதலாக வேறொரு ரயிலில் ஏறி, படுத்துத் தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, மத்தியப் பிரதேசத்திலுள்ள கஞ்ச் பசோடா (Ganj Basoda) ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்தது. அங்கு அவர் ரயிலிலிருந்து இறங்கினார்.அங்குள்ள காவல்துறை அதிகாரிகள், மாசானமுத்துவை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி, மகள், மற்றும் மகன் ஆகியோர், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உடன் சென்று, நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், ‘மாசானமுத்துவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும், அவரது குடும்பம் வறுமையில் உள்ளதால் உரிய நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், மாசானமுத்து  உடல் மத்திய பிரதேசத்திலுள்ள Ganj Basoda ஊரில் உள்ள இராஜுவ் காந்தி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இறந்தவரின் உடலை பெற்று, அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதற்கும், அவரை அடித்து, துன்புறுத்தியதால்தான் அவர் இறந்ததாக தெரியவந்தால், சம்பந்தபட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்.  மேலும், இறந்தவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால், அரசு நிவாரணமும்  வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

APPAVU Madhya Pradesh police
இதையும் படியுங்கள்
Subscribe