நெல்லை மாநகர் கே.டி.சி நகர் அஷ்டலட்சுமி தெருவில் நேற்று (27-07-25) கவின் என்ற இளைஞர் மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழ்நிலையில், கவின் ஆணவ கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கவின், சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் நேற்று தனது சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில், தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனை வாசலில் காத்திருந்த போது, அங்கு வந்த ஒரு இளைஞர் கவினை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவினின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என இளைஞர் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து சுஜித்தை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
உயிரிழந்த கவினும் சுஜித்தின் சகோதரியும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கவின், தனது சகோதரியிடம் பழகுவது சுர்ஜித்துக்கும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் சுஜித்தின் தாய் தந்தைக்கும் பிடிக்காமல் இருந்துள்ளது. இதன் காரணமாக சுஜித், கவினை கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கவின் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்தார்களா? அல்லது இருவருமே காதலித்தார்களாக? இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வரும் சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணக்குமார், கிருஷ்ணவேணி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இந்த சுஜித் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக கவினின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், உயிரிழந்த கவினின் உடலை வாங்க மறுத்து அவருடைய பெற்றோரும் உறவினர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவினின் உறவினர்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உள்ளிட்ட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.