உலக நாடுகளில் உள்ள தமிழர்களையும், அவர்களின் வாரிசுகளையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு தமிழ் மொழி, தமிழகத்தின் கலாச்சாரம், கலைகள் குறித்து தமிழக அரசு நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் கற்பித்து வருகிறது. இதில், தமிழகம் மற்றும் தமிழ் மொழி குறித்து அறிந்துகொள்ள ஆர்வமுள்ள தமிழர்களையும், அவர்களின் வாரிசுகளையும் ‘வேர்களைத் தேடி’ என ஒருங்கிணைத்து, அரசின் செலவில் தமிழகத்திற்கு அழைத்து வந்து, தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், கட்டிடக் கலைகளைக் காண அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில், சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலுக்கு பிரான்ஸ், மொரிஷஸ், ஜெர்மனி, மலேசியா, கனடா, மியான்மர், இலங்கை, பிஜி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பேர், 4-ஆம் தலைமுறை அயலகத் தமிழர்களின் வாரிசுகளாக வந்தனர். அவர்கள் கோயிலின் கட்டிடக் கலைகளைப் பார்த்து வியந்தனர். அங்குள்ள சிற்பங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
கோயிலில், உலகிற்குத் தேவாரம், திருவாசகம் கிடைக்கப்பெற்ற இடத்தைப் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து, கோயில் கருவறையின் பொன்கூரையைப் பார்த்து ரசித்து, அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர், நடராஜர் கோயில் மற்றும் நாட்டியக் கலைகள் குறித்து கேட்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதி, முக்குருணி விநாயகர் கோயில் ஆகிய இடங்களில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோயிலின் நான்கு கோபுரங்களில் உள்ள கலைகளை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து, கும்பகோணம் அருகே நாதஸ்வரம் தயாரிக்கும் இடத்திற்கும், அதே பகுதியில் உள்ள தாராசுரம் கோயிலின் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலைகளைக் காணவும் சென்றனர்.
‘வேர்களைத் தேடி’ என்ற இந்தப் பயணத்தில், அயலகத் தமிழர்கள் தமிழக கலாச்சாரம், கட்டிடக் கலை, முக்கிய நீர்நிலைகள், பழம்பெரும் கோயில்கள், தமிழர்களின் பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்வதற்காக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் வரும் 15-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ளனர். கடந்த 1-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் கண்ணன், அயலகத் தமிழர்கள் நல மற்றும் மறுவாழ்வு ஆணையர் அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.