குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை நியமிப்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், இந்தியா கூட்டணியும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தன.

Advertisment

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். நாடாளுமன்ற இரு அவையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 426 எம்.பிக்கள் உள்ளதால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் அவருக்கு தற்போதில் இருந்தே வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. இது ஒருபுறமிருக்க இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இந்தியா கூட்டணித் தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக எதிர்க்கட்சிகள் தங்கள் நடவடிக்கையை வியூகம் வகுத்து வருகின்றன.

இந்த நிலையில், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் கூட்டம் இன்று (19-08-25) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை, பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சிகளிடம் அறிமுகப்படுத்தினார். மேலும் அவர், சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்க்கட்சிகள் முதற்கொண்டு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஜவஹர்லால் நேரு நாட்டை ஒரு முறை அல்ல, இரண்டு முறை பிரித்தார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் 80 சதவீத நதி நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தியாவின் உரிமையான நீர் பங்கை விட்டுகொடுத்ததால் பாகிஸ்தானுக்கு பயனளித்தது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு எந்த உறுதியான நன்மையும் தரவில்லை என்பதை நேரு தனது செயலாளர் மூலம் பின்னர் ஒப்புக்கொண்டார். இது இந்திய விவசாயிகளுக்கு எதிரானது. இதனால் இந்திய விவசாயிகளின் முக்கிய நீர் வளங்கள் இழந்தது” என்று கூறினார்.