சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் தூய்மைப் பணியாளர்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தைக் கைவிடக் கோரியும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தக் கோரியும், தூய்மைப் பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக சென்னை மாநகராட்சியின் நுழைவு வாயில் அருகே கூடாரம் அமைத்து போராடி வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் அமர்ந்து ஐந்து ஆண்டுகள் முடியும் தருவாயிலும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மாறாக, அதிமுகவைப் போலவே செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், போராட்டத்தைக் கைவிடுமாறு அரசு மற்றும் காவல்துறை தரப்பில் இருந்து பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், போராட்டக்காரர்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் குழுவுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன்பு ஆறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுடன் ஏழாவது கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட கட்சியினர் நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.