திருவள்ளூர் மாவட்டம் அயத்தூர் அருகே சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநின்றவூரிலிருந்து திருத்தணியை நோக்கிச் செல்லக்கூடிய சாலை நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருவள்ளூர் மாவட்டம் அயத்தூர் என்ற பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் கிருஷ்ணன் என்ற முதியவர் அருகில் உள்ள ஊரில் நடைபெற்ற திருவிழா ஒன்றுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர் ஊர் திரும்பிய பொழுது சாலைப் பள்ளத்தில் பைக் உடன் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார். சாலை பணிக்காக தோண்டப்பட்டப் பள்ளத்தின் அருகே சாலைப் பணியின் பொழுது வைக்கப்படும் எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு பலகை ஏதும் வைக்கப்படாததால் இந்த விபத்து நேர்ந்ததாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர் முதியவர் கிருஷ்ணனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.