'NDA will get more seats in Tamil Nadu than in Bihar' - G.K. Vasan Photograph: (GK VASAN)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்திப்பு மேற்கொண்டார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன் பேசுகையில், ''பீகார் தேர்தல் என்பது எடுத்துக்காட்டான தேர்தல். ஜாதி, மதம், மொழி, இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு வளர்ச்சி வளர்ச்சி, மத்திய மாநில அரசினுடைய இணக்கம் என்ற ரீதியில் வெற்றிபெற்றுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமி என்ற ரீதியில் எங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இன்னும் பல கட்சிகள் எங்களோடு கூட்டணி சேர்வதற்கான காலம் நேரம் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள் இன்னும் காலம் நேரம் இருக்கிறது.
கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. எங்களைப் பொறுத்த வரையில் அதிமுக தமிழ்நாட்டில் பெரிய கட்சி. அந்த கட்சியுடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அந்த நிலையை நாங்கள் தொடர்கிறோம். கூட்டணிக்கு வரும் கட்சிகள் எல்லாம் தொடர்ந்து அதிமுகவின் செயல்பாடு, எடப்பாடியின் சுற்றுப்பயணம், மக்களுடைய எழுச்சி, மத்திய அரசினுடைய இணக்கம், பீகார் தேர்தல் எதிரொலி என்பதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள். சரியான முடிவை சரியான நேரத்தில் கூட்டணியில் இல்லாத கட்சிகள் எடுப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒத்த கருத்துடையவர்கள் எல்லாம் என்டிஏவின் பாஜக-அதிமுக கூட்டணியில் ஒன்று சேர்ந்து ஆட்சியாளர்களை மாற்ற வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டால் முடியும். பீகாரை விட அதிகமான இடங்கள் கூட தமிழகத்தில் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது''என்றார்.
Follow Us