மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி (N.C.E.R.T) வெளியிட்டுள்ள பாடப்புத்தகத்தில் அக்பரின் ஆட்சி கொடூரமானது என்றும் பாபர் ஒரு இரக்கமற்ற வெற்றியாளர் என்றும் ஒளரங்கசீப் ஒரு ராணுவ ஆட்சியாளர் என்றும் தெரிவித்திருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாடத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு ததேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) என்ற அமைப்பு பாடப்புத்தகங்களை தயாரித்து வருகிறது. நடப்பாண்டில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்துக்கு ஒரு புதிய புத்தகத்தை என்.சி.இ.ஆர்.டி வெளியிட்டுள்ளது. ‘சமூகத்தை ஆராய்தல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் முதல் முறையாக டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள் மற்றும் காலனித்துவ ஆட்சி குறித்து இடம்பெற்றுள்ளது.

என்.சி.இ.ஆர்.டி வெளியிட்டுள்ள புதிய புத்தகத்தில், 13 முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றை குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இந்தியாவின் அரசியல் வரைப்படத்தை மறுவடிவமைத்தல்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பாடத்தில் டெல்லி சுல்தான்களின் வளர்ச்சியும் எழுச்சியும், விஜயநகரப் பேரரசு, முகலாயர்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் சீக்கியர்களின் எழுச்சி ஆகியவை இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பாபரை, நகரங்களின் முழு மக்களையும் கொன்று குவித்த கொடூரமான மற்றும் இரக்கமற்ற வெற்றியாளர் என்றும், ஒளரங்கசீப்பை கோயில்களையும் குருத்வாராக்களையும் அழித்த ராணுவ ஆட்சியாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்பரின் ஆட்சியில் பல்வேறு மத நம்பிக்கைகளுக்கு கொடூரத்தன்மையாகவும் சகிப்புத்தன்மையாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்த புத்தகத்தில், நிர்வாகத்தின் உயர் பொறுப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் சிறுபான்மையினராக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சித்தோர்கர் முற்றுகைக்குப் பிறகு, அக்பர் சுமார் 30,000 பொதுமக்களை படுகொலை செய்ய உத்தரவிட்டதாகவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் ஆட்சி மீது குற்றச்சாட்டு வைத்துள்ள அதே நேரத்தில் மராத்தியர்கள், அஹோம்கள், ராஜபுத்திரர்கள் சீக்கியர்கள், சத்ரபதி சிவாஜி மகாராஜ், மற்றும் தாராபாய்  மற்றும் அஹில்யாபாய் ஹோல்கர் போன்ற நபர்களின் ஆட்சியில் நாடு முன்னேற்ற பாதையில் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.