ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரங்கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் காதலை ஏற்க மறுத்ததால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ‘பெண்களுக்கெதிரான திமுக ஆட்சி விரைவில் ஒழிய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியைப் பள்ளி செல்லும் வழியில் மறித்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது. கொலையான மாணவியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மீளாத் துயரைக் கடந்து வர இறைவன் அவர்களுக்குத் துணைநிற்க வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாள் விடியும் பொழுதும் இன்று எந்தப் பெண்ணுக்கு எங்கே வன்கொடுமை நடந்துள்ளதோ என்ற பதற்றத்திலேயே செய்தித்தாள்களைப் பிரிக்க வேண்டியிருக்கிறது.
இத்தனை ஆயிரம் காவல்துறையினர் இருந்தும் கூட நமது வீட்டுப் பிள்ளைகளை நாம் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. கைதுகள் தான் அதிகரிக்கிறதே தவிர திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூறி பாஜக பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது, கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தன் வாரிசுகளை மட்டுமே உயர்ந்ததாக நினைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், நம் பிள்ளைகளைத் தொடர்ந்து பலிகொடுக்கத் தயாராகிவிட்டார். இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி இனியும் தமிழகத்தில் தொடரக்கூடாது. திமுகவின் இந்த காட்டாட்சிக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடிய விரைவில் கடிவாளமிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/19/nainar-mic-2-2025-11-19-14-43-24.jpg)