20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. மேலும், கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் மட்டுமே மக்கள் தொகை இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸாடாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் நோ மெட்ரோ (NO METRO) என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம்.
அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படிப் பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படிச் சிதைப்பதைச் சுயமரியாதை மிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம். அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மெட்ரோ இரயில் குறித்து வதந்திகளைப் பரப்பி மீண்டும் மீண்டும் அரசியல் செய்யும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே!, திடீரென கோவை மற்றும் மதுரை மெட்ரோ மீது அதீத அக்கறையைக் காட்டும் நீங்கள், முதலில் தங்களது திமுக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் (DPR) உள்ள கூறுகளை முழுவதுமாக படித்தறிந்தீர்களா?
1. கோவை மெட்ரோவிற்கான விரிவான திட்ட அறிக்கையில், ஏற்கனவே தற்போது இருக்கும் பயண நேரத்துடன் ஒப்பிடுகையில், மெட்ரோ இரயில் திட்டத்தால் பெரிய அளவில் நேரச் சேமிப்பு இல்லை என்று காட்டப்பட்டுள்ளது. 2. திமுக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்னருள்ள 2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி மக்கள்தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. 2025இன் உத்தேச மக்கள்தொகை ஏன் குறிப்பிடப்படவில்லை?. 3. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட Comprehensive Mobility Plan-இல், மதுரையில் உள்ள தற்போதைய பயணிகளின் எண்ணிக்கைக்கு BRTS (Bus Rapid Transit System)-ஏ போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போதாததற்கு, கோவையில் தாங்கள் சமர்ப்பித்துள்ள மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்தினால், அதிக அளவில் பொதுமக்களின் சொத்துகள் இடிக்கப்பட நேரிடும். இந்த லட்சணத்தில் தான் தாங்கள் சமர்ப்பித்துள்ள திட்ட அறிக்கை உள்ளது. மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் மெட்ரோ அறிக்கையில் பல தவறுகள் இருப்பதைத் தாண்டி, மெட்ரோவிற்கான தேவையை நியாயப்படுத்தக்கூட முன்வரவில்லை. இனியாவது தங்களது மடைமாற்ற அரசியலுக்காக மெட்ரோவைக் கையிலெடுப்பதை நிறுத்துங்கள் முதல்வரே! அது தான் ஒரு நல்ல முதல்வருக்கு அழகு மட்டுமல்ல, பொறுப்பும் கூட” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் மக்கள் தொகை குறைவாகவுள்ள ஆக்ரா, நாக்பூர், புனே மற்றும் கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us