மாணவர்களின் கற்றலில் திமுக அரசு இடையூறு ஏற்படுத்தியுள்ளது  என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்துவதற்காக திருச்சி மாவட்டம் ஆலத்துடையான்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்களின் கற்றலில் திமுக அரசு இடையூறு ஏற்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு முன் இதே விளம்பரத் திட்டத்திற்காக வகுப்பறையை ஆக்கிரமித்துவிட்டு உசிலம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளி மாணவர்களை வெயிலில் நிற்க வைத்த நிலையில், தற்போது விடுமுறை அளித்து மீண்டுமொருமுறை மாணவர்களின் கல்விக்கு தடைபோட்டிருப்பது திமுக அரசின் விளம்பர மோகத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

எத்தனையோ மண்டபங்களும் சமூக நலக்கூடங்களும் இருக்கையில், திமுகவின் விளம்பர நாடகத்தை அரங்கேற்ற அரசுப்பள்ளி வகுப்பறைகள் தான் கிடைத்ததா?, இதற்கு முன் குறைகளைத் தீர்ப்பதாய் மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று ஆற்றில் வீசியெறிந்த நிலையில், தற்போது அதேபோன்ற நாடகத்திற்காக மாணவர்களின் படிப்பைத் தூக்கியெறிந்து அவர்களின் வாழ்வில் விளையாட வேண்டுமா?. தனது தேர்தல் ஆதாயத்திற்காக ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அலட்சியப்படுத்தும் திமுக அரசின் அலங்கோல நிர்வாகமும் அராஜகப் போக்குமே அதனை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்! இது நிச்சயம்” எனத் தெரிவித்துள்ளார்.