நாட்டின் 77வது குடியரசு தின விழா இன்று (26.01.2026) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எனப் பலரும் பங்கேற்றனர். இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின தேநீர் விருந்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் உடன் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் சந்தித்து பேசினார். அதே போன்று அதிமுக மாநிலங்களவை எம்பி தனபாலும் சுதீஷுடன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உடனும் அதிமுக, பாஜக நிர்வாகிகள் பேசியதாக கூறப்படுகிறது. தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காத நிலையில் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து என்.டி.ஏ.வுடன் கூட்டணியான என செய்தியாளர்கள் கேட்டதற்கு எல்.கே. சுதீஷ் பதிலளிக்காமல் மௌவுனமாக அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இது குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் எனது நண்பர் சுதீஷை தற்செயலாக சந்தித்தேன். அதன் அடிப்படையில் நாங்கள் பேசிக்கொண்டோமே தவிர இதில் நாங்கள் எதிலும் அரசியல் பேசவே இல்லை” எனத் தெரிவித்தார்.
Follow Us