தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உள்ள பிரச்சாரப் பயணத்தை அக்டோபர் 12ஆம் தேதி (12.10.2025) மதுரையில் இருந்து தொடங்குகிறார். இந்தத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைக்க அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியைச் நயினார் நாகேந்திரன் சேலத்தில் நேற்று (21.09.2025) சந்தித்து அழைப்பு விடுத்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் சம்மதம் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் நயினார் நாகேந்திரன் இன்று (22.09.2025) மாலையில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் நயினார் நாகேந்திரன், டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் அக்டோபர் 12ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்களை ஜே.பி. நட்டாவிடம் அளித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு டெல்லியில் நயினார் நாகேந்திரன் செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அக்டோபர் 12ஆம் தேதி மதுரையிலிருந்து நான் மக்களை சந்திக்கின்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இதற்காக ஜெ.பி.நட்டாவை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.
ஜே.பி.நட்டா 6ஆம் தேதி சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவிற்கு வருகிறார். 7ஆம் தேதி பாண்டிச்சேரி செல்கிறார். 12ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவரும் பார்ப்பதாக கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவில்லை. சுற்றுப்பயணம் தொடங்க உள்ள் தேதி குறித்து சொன்னவுடன் அதிமுக சார்பில் யார் கலந்து கொள்ளவார்கள் என்று கூறுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய டிடிவி தினகரனை பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் இன்று மாலை சந்தித்துப் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.