கரூர் உயிரப்பு சம்பவத்தை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் தவெகவையும், தவெக தலைவர் விஜய்யையும் கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், கரூருக்கு சென்ற போது விபத்து ஏற்படுத்திய விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய தமிழக போலீசார் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படியான நெருக்கடியில் சிக்கியிருக்கும் விஜய்யுடன், பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது. டெல்லியைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர், கூட்டணி தொடர்பாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விஜய்க்கு ஆதரவாக துணை நிற்பதாக உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது. கரூருக்கு விஜய் செல்லாததும், நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்யுடன் பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வரும் தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திர நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “கரூரில் விஜய் வரும் போது ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது?. அவர்கள் கேட்ட இடத்தில் ஏன் அனுமதி கொடுக்கவில்லை?. இதெற்கெல்லாம் முதல்வர் பதில் சொல்வாரா? அரசியல் கட்சித் தலைவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், கட்சித் தலைவர் வரும் போது மின்சாரத்தை அணைப்பதையும், தடியடி நடத்துவதையும், செருப்புகளை வீசுவதையும் முதல்வர் அனுமதிக்கிறாரா?. சம்பவம் நடந்து இரவோடு இரவாக 5 மணி நேரத்தில் எப்படி முதல்வர் வர முடிந்தது? உடல் கூறாய்வுகள் மாலை 5 மணிக்கு மேல் யாரும் செய்யக்கூடாது. இரவோடு இரவாக 30, 40 சடலங்களுக்கு உடல் கூறாய்வுகள் செய்தது எப்படி? தவறு செய்தவர்களை எல்லாம் காப்பாற்ற நாங்கள் நீதிமன்றம் கிடையாது. நாங்கள் அரசியல் கட்சி வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.
இதையடுத்து, விஜய்யுடன் பா.ஜ.க மறைமுக கூட்டணி வைத்திருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது எல்லாம் திமுகவுடைய சதி. ஏனென்றால் இன்றைக்கு திமுக மக்களுடைய விரோதியாக மாறி இருக்கிறது. மக்களுடைய நன்மதிப்பை பெரிதும் இழந்திருக்கிறது. எந்த நேரத்தில் தேர்தல் நடந்தாலும் திமுக டெபாசிட் வாங்குமா என்று தெரியாது. அவர்கள் கூட்டணி இருக்கிறது என்று மட்டுமே சொல்லி வருகிறார்கள் இதே மாதிரி கூட்டணி எல்லாம் இருந்தது. 2011இல் கலைஞர் மிகப்பெரிய கூட்டணி வைத்திருந்தார். ஆனால் என்ன ஆனது?. அப்போது ஜெயலலிதா தான் ஜெயித்தார். அதனால் கூட்டணி பலத்தோடு இருக்கிறோம் என்ற ஒரு மாயையை திமுக உருவாக்கி இருக்கிறது. அந்த மாயையை, 2026 தேர்தலில் மக்கள் முறியடிப்பார்கள்” என்று கூறிச் சென்றார்.