இந்தியாவின் மிகப் பயங்கரமான திருட்டு கும்பல்களில் ஒன்று நவோனியா கும்பல்(Navonia Gang). ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எளிதாகக் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள் இந்த நவோனியா கும்பல். ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தக் கும்பல், கூட்டமான இடங்களில் புகுந்து, பிளாஸ்டிக் பைகள், செய்தித்தாள், துணி போன்றவற்றைப் பயன்படுத்தி திருடுவதில் வல்லவர்கள். பொதுவாக இவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகச் செயல்படுகின்றனர். சில சமயங்களில் தங்கள் திருட்டு வேலைகளில் சிறுவர்களையும் ஈடுபடுத்துவதாகத் தெரிகிறது.
ஒரு நகரத்திற்குள் நுழையும் இந்தக் கும்பல், ஒரு சில வாரங்கள் முதல் ஒரு மாதம் அவரை அங்கேயே தங்கி, திட்டமிட்டு நகைகள், செல்போன், பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துவிட்டு, பிறகு தங்களது சொந்த மாநிலத்திற்குத் திரும்பிவிடுவார்களாம். அதன்பிறகு எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாதாம். இப்படி நாட்டையே கதிகலங்க வைக்கும் நவோனியா கேங் தற்போது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நுழைந்திருக்கிறது.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் ஒருவரின் செல்போன் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் சில நபர்களை அடையாளம் கண்டு, சந்தேகத்தின் பேரில் அவர்களை விசாரணை செய்தனர். அதில்தான் அவர்கள் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த நவோனியா கும்பல் என்ற திடுக்கிடும் தகவலை அறிந்து, காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னைக்குள் நுழைந்த இந்தக் கும்பல், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், மற்றும் மெரினா கடற்கரை போன்ற சுற்றுலாத் தலங்கள் எனப் பல இடங்களில், கூட்டத்தைப் பயன்படுத்தி நகை, மொபைல் ஃபோன்கள் மற்றும் பணம் போன்றவற்றைக் கொள்ளையடித்தது தெரியவந்திருக்கிறது. மேலும், பிடிபட்டவர்கள் மீது ஏற்கெனவே ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மற்றொரு சம்பவத்தில், மாம்பலம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் அருகே ஒரு பயணியிடம் மொபைல் ஃபோனைத் திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
இதனைத் தொடர்ந்து, ஒரு சிறுவர் உள்பட 4 பேரைக் கைது செய்த காவல்துறையினர், இன்னும் யார் யார் தமிழகத்தில் நுழைந்திருக்கிறார்கள்? என்ன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்? திருடிய பொருட்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளுடன் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களுக்கும், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கும் நவோனியா கேங் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நவோனியா கும்பலின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள காவல்துறை, பொது இடங்களில் செல்லும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் நபர்களைக் கண்டால் உடனடியாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
1990களின் பிற்பகுதி முதல் 2000களின் தொடக்கம் வரை, தென்னிந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் கொடூரமான கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களை நிகழ்த்தியது ‘பவேரியா கும்பல்’ (Pavaraiya Gang). தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைப் பதற்றத்தில் ஆழ்த்திய இந்தக் கும்பலுக்கு, தமிழ்நாடு காவல்துறையின் தீவிர நடவடிக்கைகள் மூலம் முடிவு கட்டப்பட்டது. இந்நிலையில், தற்போது மிகப் பயங்கரமான நவோனியா கும்பல் தமிழகத்திற்குள் நுழைந்து, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.