சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையால், பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதனால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனிடையே, உக்ரைன் போர் விவகாரத்தில் உலக நாடுகளிடம் இருந்து ரஷ்யாவைத் தனிமைப்படுத்த டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தகம் வைத்துள்ள நாடுகள் மீது அதிக வரி விதிக்கும் மசோதாவை கொண்டு வந்தார். அதன்படி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% இறக்குமதி வரி விதிக்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்கா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த மசோதா விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் கடும் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் ‘நேட்டோ’ (NATO) அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணுவ ஒத்துழைப்புக்கான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் விரும்பியது. ஆனால், ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததால் ரஷ்யா - உக்ரைன் இடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக அவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடையை விதித்தது.
ஆனால் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகள் கச்சா எண்ணெய், ஆயுதங்கள் போன்றவற்றை வாங்கி ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா சுமார் 15% பங்களிப்பை கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ‘நேட்டோ’ அமைப்பின் பொது செயலாளரும், நெதர்லாந்தின் முன்னாள் பிரதமருமான மார்க் ரூட்டே அமெரிக்கா சென்று டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மார்க் ரூட்டே, “இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இரண்டாம் நிலைத் தடைகளால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். இந்த மூன்று நாடுகளுக்கும், குறிப்பாக, நீங்கள் இப்போது பெய்ஜிங்கில் அல்லது டெல்லியில் வசிக்கிறீர்கள் என்றாலோ, அல்லது நீங்கள் பிரேசிலின் ஜனாதிபதியாக இருந்தாலோ இதனை கவனித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது உங்களை மிகவும் கடுமையாக பாதிக்கலாம்” என்று கூறினார்.