4 முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டது. அதாவது தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன்படி சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 2020, தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு 2020, ஊதியம் குறித்த சட்டத் தொகுப்பு 2019, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் & பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020 ஆகியவை நடைமுறைக்கு வந்தன.
இதில், குறைந்தபட்ச ஊதியம் தாமதமின்றி கிடைப்பது, அனைவருக்கும் நியமன கடிதங்களை வழங்குவது, மகளிர்களுக்கு உரிய ஊதியம் மட்டுமல்லாமல் அவர்களுக்கான போதிய மரியாதையும் வழங்குவது, ஓராண்டு பணிக்குப் பிறகு குறிப்பிட்ட காலப் பணியாளர்களுக்கும் பணிக்கொடை கிடைக்கும் உத்தரவாதம் வழங்குவது, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது, அனைவருக்கும் 100% மருத்துவ காப்பீட்டு வழங்குவது, கூடுதல் நேரம் பணிபுரிந்தால் அவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் பெறுவது, ஆபத்தான துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 100% சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் 9 முக்கிய உத்தரவாதங்கள் அமலுக்கு வந்தன.
இந்நிலையில் மாநில அரசுகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுடன் கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். மின்சார சட்டத்தைத் திருத்தக் கூடாது. வங்கி ஊழியர்களுக்கு வாரம் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக இருக்க வேண்டும். அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவுகளைக் கைவிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்தும், நாடு தழுவிய அளவில் இன்று (12.02.2026) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
அதன்படி தமிழகத்தில், திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதோடு ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 30 கோடி தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக அரசு அலுவலகங்களின் சேவைகள் மற்றும் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. ​அரசு பேருந்து சேவை, எல்.ஐ.சி உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/pro-empty-road-ai-image-2026-02-12-08-19-43.jpg)