மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
இம்மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தரமற்ற உணவு கொடுத்ததால் கேண்டீன் ஊழியரை சிவசேனா கட்சி எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் என்பவர் கடுமையாக தாக்கி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ சஞ்சய் ஷிர்சாத் வீட்டில் பணப்பையுடன் இருந்து சர்ச்சையில் சிக்கினார். இந்த இரண்டு நிகழ்வுகளும் அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மாணிக் கோகடே என்பவர் மாநில சட்டமன்றத்தில் தனது மொபைல் போனில் ரம்மி விளையாடுவது போன்ற வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் பவார் பகிர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரோஹித் பவார் கூறுகையில், “விவசாயம் தொடர்பான பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ள போதும், ஆளும் தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் கலந்தாலோசிக்காமல் செயல்பட முடியவில்லை. மேலும் மாநிலத்தில் தினமும் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், வேலையில்லாத விவசாய அமைச்சருக்கு ரம்மி விளையாட நேரம் இருப்பதாகத் தெரிகிறது” என்று தெரிவித்தார்.