இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரைக் கவுரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. 

Advertisment

அதன்படி தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆசிரியை ரேவதி பரமேஸ்வரனுக்கும், திருப்பூரில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் பள்ளி ஆசிரியை வி. விஜயலட்சுமிக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது வாங்குவதைத் தொடர்ந்து அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று (05.09.2025) டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் உள்ள அரங்கில் தேசிய நல்லாசிரியர் விருதை வழங்க உள்ளார். நாடு முழுவதிலும் இருந்தும் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.