கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் தேசிய விளையாட்டுத் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் ஏ. ரூபியால்ராணி முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளியின் சாரண, சாரணியர், நீலப் பறவைகள் மாணவர்கள் கௌரவ அணிவகுப்பு நடத்தி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். இதனை தொடர்ந்து பள்ளியின் விளையாட்டு சாதனையாளர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்கள்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை பேராசிரியர் ராஜசேகரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவர்கள் மத்தியில் விளையாட்டுகள் என்பது வெறும் உடல் பயிற்சி மட்டுமல்ல அது ஒழுக்கம், ஒற்றுமை, சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை போன்ற உயர்ந்த பண்புகளை மாணவர்களிடம் வளர்க்கும். ஒரு கல்வியுடன் இணைந்த விளையாட்டு தான் ஒரு மாணவனை முழுமையான நற்பண்புகள் கொண்ட குடிமகனாக உருவாக்குகிறது என்று விளக்கி கூறினார்.
பள்ளியின் நிர்வாக இயக்குநர் வி.அருண், தலைவர் அ.லியோனா ஆகியோர் ஒலிம்பிக் கொடியை ஏற்றிவைத்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்கள். சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் புறாக்களை பறக்க விட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் த. நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் பொனிகலா, பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. ஆசிரியை வி.ரேவதி நன்றி கூறினார்.